Sunday, January 31, 2016

இறுதிச் சுற்று
---------------------

சமீப கால திரைப்படங்களுக்குள் சுற்றி வந்து இளைப்பாறிய நம்மை ஒரு திரைப்படம் தாண்டிய சுற்றுக்குள் வரவழைக்கிறது இந்த இறுதி சுற்று. ஜனரஞ்சக படம் தருகிறேன் என்று காதலின் வட்டத்துக்குள்ளும், மோதலின் உச்சத்திலும், நகைச்சுவைகளும் கலந்த வியாபார நோக்கம் கொண்ட படங்களின் நடுவே இந்த திரைப்படம் கொஞ்சம் விலகியே நிற்கிறது.
ஒரு திரைப்படம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தவேண்டுமேன்றால் அதற்க்கு களம் மிகவும் அவசியம். ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால் உயிரோட்டம் மிகுந்த கதைக்களன் மிகவும் அவசியம். இதை நான் ஏன் அடிக்கோடு இடுகிறேன் என்றால் இதுவே நல்ல திரைப்படத்தின் அடிப்படை.
ஒரு முழு நீள படத்தில் கதாநாயகனோ, கதாநாயகியோ வியாபித்து இருந்தால் அது அவர்களை சார்ந்த திரைப்படம் ஆகிவிடும், ஆனால் கதையும் அதை சார்ந்த உணர்சிகளும் உங்களை பார்பவர்களை ஆட்கொண்டால் அதுவே தனிப்பெரும் வெற்றி.
செல்லுலாயிடு பப்ளியாக பார்த்த மாதவனை ஒரு முரட்டுத்தனம் கொண்ட பயிற்சியாளராக, கோபக்கனல் தெறிக்கும் ஒரு ஆடவனாக கண்டிப்பாக மாற்றுவதற்கு, நாம் அதை ஏற்பதற்கு கதையும் அதன் காட்சி அமைப்பும் மட்டுமே சாட்சிகள்.
ஒரு தகுதி வாய்ந்த வீராங்கனையை உருவாக்க ஒரு பயிற்சியாளனாய் ஒரு பக்குவபட்ட நடிப்பு. சக வீராங்கனை காதல் வயப்பட்ட போதும் கடைமையை மட்டுமே உற்றுநோக்கும் பாங்கு, அரசியலாக்கப்பட்ட வீராங்கனை தேர்வு முறைகள் மற்றும் முறைகேடுகள்..இந்த வலிகளை எல்லாம் இயக்குனர் நம்மோடு உலவ விடுகிறார்.
ஒரு பெண்ணின் உணர்வுகளையும் அதே நேரத்தில் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு கோணங்களில் சொல்லி இருக்கிறது இந்த திரைப்படம். இந்தியா என்று எழுதிய அந்த சட்டை அவள் கையில் தவழும் வேளையில் நமக்குள் ஒரு இனம் புரியாத உணர்ச்சி வந்து போவதை மறுக்க முடியாது.
கதாநாயகி பற்றி நான் சொல்வதை விட நீங்கள் அதை விழிகளின் வழியே அவளின் வலிகளையும், உணர்சிகளையும் உள்வாங்கி பாருங்கள், அதில் ஒரு அழுத்தம் தெரியும். ஆனால் சர்வ சாதாரணமாக மீனவ குப்பத்திலிருந்து தொடங்கும் நாகரீகமற்ற வார்த்தைகோவைகளும், காதலின் பரிமாணங்களை உணர்ந்த பின்னர் பெண்மையின் உந்துதல்களும், வலி, ரணம், ஏமாற்ற உணர்சிகளும், வீராங்கனையாக வெற்றி பெரும் போதும், அதனை கடைசியாக பயிற்சியாளரை தாவி கட்டி அனைத்துகொள்ளும் போது உங்களின் கண்களில் சிறு துளி நீராவது பூத்திருக்கும்.
இறுதி சுற்று ஒரு பெரிய சுற்று வருவதற்கு எல்லா காரணிகளும் நிரம்பியே உள்ளன. ஒரு சராசரி படத்திற்கு வெற்றி தோல்வி என்பது அதன் வருமானங்களை வைத்தே நிர்ணயிக்க படும், இந்த திரைப்படம் அதையும் தாண்டிய வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலே நீங்கள் படித்தது விமர்சனம் அல்ல, திரைப்படத்தின் தாக்கம்.

Saturday, December 26, 2015

பசங்க-2 - யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

 பசங்க-2 - இன்றைய அன்றாட வாழ்வில் பெற்றோராய் நாம் கடந்து வந்த பாதையை, அணுகுமுறைகளை அதில் உள்ள தவறுகளை நமக்கே சுட்டி காட்டி இருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் விலகி இருந்தால் இது ஆவணப் படம் போல் ஆகி இருக்கும், அதனை சில சுவாரசியங்களோடு சூர்யா மற்றும் அமலா பால் கொண்டு அருமையாக தீட்டி இருக்கிறார்.

இதில் புதைந்து இருக்கும் கருத்துக்கள் விமர்சினத்திற்க்கு அப்பாற்பட்டு போகிறது. ஒரு தந்தையாய் நான் படம் பார்க்கும் போது உணர்ச்சிவசப்பட்டு போனேன். ஏனெனில் நானும் இந்த வலிகளை கண்டிருக்கிறேன். பலமுறை கண்டித்திருக்கிறேன்.பள்ளியில் இவனது செயல்பாடுகள் எங்களோடு பகிர்த்துகொள்ளபடும் தருவாயில் பல முறை நான் எதிர்காலம் குறித்து பயப்பட்டது உண்டு.

இந்த திரைப்படம் கண்டிப்பாக பல குடும்பங்களுக்கு மருந்தாகவே பார்க்கப்படும். கண்டிப்பாக கண்டிப்பான பெற்றோர்களுக்காக மட்டும்.
நமது நிராசைகளை, கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்ற கூடாது என்பதை இதற்க்கு மேல் வலிக்காமல் சொல்ல முடியாது.

ஒவ்வொரு காட்சிகளாக அடுக்கி சொல்ல விருப்பம் இருப்பினும் உங்கள் அனுபவத்திற்காக சுருக்கி இருக்கிறேன்.

பசங்க-2 - யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

Saturday, December 19, 2015

தங்கமகன் Vs தகர மகன்

 முப்பத்தி இரண்டு நிமிடங்களுக்கு பிறகும் கதை என்ற வஸ்துவுக்குள் விழவைக்க முடியாத தங்க மங்கன் ஒரு தகர மகனே. திருவாளர் தனுஷ் அவர்களின் பழைய படங்களையே ரீமேக் செய்யும் திறமை தமிழ் நாட்டில்
யாருக்கும் இருக்க வாய்ப்பு இல்லை.

கதை இல்ல திரையும், மீசை இல்ல தனுஷும், சிரிக்க வராத நகைசுவையும், சீண்டி பார்க்காத காதல் சுவையும், தேவதைகள் இருந்தும் தெரு விளக்காய் இருள் கவிழ்ந்த இந்நிலையும், பொங்கலுக்கு போட்டுருவாங்க என்ற உணர்வையே தருகிறது.

சமீபத்தில் வந்த சில படங்களை பார்க்கும் போது இது திருஷ்டிக்கு உடைபட்ட வெள்ளை பூசணிக்காய். இந்த படம், நான் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட படங்களை சற்றே திரும்பி பார்க்க தூண்டுகிறது. ஆறு வித்தியாச போட்டி இந்த திரைப்படத்திற்கும் தனுஷின் மற்ற படங்களுக்கும்.

Sunday, December 21, 2014

காட்டில் படர்ந்த சிவப்பு கொடி - புகைப்பட கவிதை

காட்டில் படர்ந்த சிவப்பு கொடி

புகைப்பட கலைஞர் : மக்கா @ பகத்
நன்றி : மக்கா  போட் டோக்ராபி

இவர் எடுக்கும் பெரும்பாலான (சரியாய் படிக்கவும், பெரும்பாலான - நீங்கள் பெரும் பலான என்று படித்தால் நான் பொறுப்பல்ல. உங்கள் தமிழ் ஆசிரியரே பொறுப்பு) படங்களுக்கு நான் எதாவது கிறுக்கி விவதுட்விடுவதுண்டு. அந்த வகையில் இங்கு உள்ளதும் ஒரு வகை கிறுக்கல்களே! 

எழுதிட்டேன், தூக்கம் வரல..காத்திருக்கிறேன், அடுத்த கவிதைக்காக.

Click on the photo to enjoy the complete picture!!

நன்றி 
ஷ்யாம் சுந்தர்