Sunday, January 31, 2016

இறுதிச் சுற்று
---------------------

சமீப கால திரைப்படங்களுக்குள் சுற்றி வந்து இளைப்பாறிய நம்மை ஒரு திரைப்படம் தாண்டிய சுற்றுக்குள் வரவழைக்கிறது இந்த இறுதி சுற்று. ஜனரஞ்சக படம் தருகிறேன் என்று காதலின் வட்டத்துக்குள்ளும், மோதலின் உச்சத்திலும், நகைச்சுவைகளும் கலந்த வியாபார நோக்கம் கொண்ட படங்களின் நடுவே இந்த திரைப்படம் கொஞ்சம் விலகியே நிற்கிறது.
ஒரு திரைப்படம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தவேண்டுமேன்றால் அதற்க்கு களம் மிகவும் அவசியம். ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால் உயிரோட்டம் மிகுந்த கதைக்களன் மிகவும் அவசியம். இதை நான் ஏன் அடிக்கோடு இடுகிறேன் என்றால் இதுவே நல்ல திரைப்படத்தின் அடிப்படை.
ஒரு முழு நீள படத்தில் கதாநாயகனோ, கதாநாயகியோ வியாபித்து இருந்தால் அது அவர்களை சார்ந்த திரைப்படம் ஆகிவிடும், ஆனால் கதையும் அதை சார்ந்த உணர்சிகளும் உங்களை பார்பவர்களை ஆட்கொண்டால் அதுவே தனிப்பெரும் வெற்றி.
செல்லுலாயிடு பப்ளியாக பார்த்த மாதவனை ஒரு முரட்டுத்தனம் கொண்ட பயிற்சியாளராக, கோபக்கனல் தெறிக்கும் ஒரு ஆடவனாக கண்டிப்பாக மாற்றுவதற்கு, நாம் அதை ஏற்பதற்கு கதையும் அதன் காட்சி அமைப்பும் மட்டுமே சாட்சிகள்.
ஒரு தகுதி வாய்ந்த வீராங்கனையை உருவாக்க ஒரு பயிற்சியாளனாய் ஒரு பக்குவபட்ட நடிப்பு. சக வீராங்கனை காதல் வயப்பட்ட போதும் கடைமையை மட்டுமே உற்றுநோக்கும் பாங்கு, அரசியலாக்கப்பட்ட வீராங்கனை தேர்வு முறைகள் மற்றும் முறைகேடுகள்..இந்த வலிகளை எல்லாம் இயக்குனர் நம்மோடு உலவ விடுகிறார்.
ஒரு பெண்ணின் உணர்வுகளையும் அதே நேரத்தில் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு கோணங்களில் சொல்லி இருக்கிறது இந்த திரைப்படம். இந்தியா என்று எழுதிய அந்த சட்டை அவள் கையில் தவழும் வேளையில் நமக்குள் ஒரு இனம் புரியாத உணர்ச்சி வந்து போவதை மறுக்க முடியாது.
கதாநாயகி பற்றி நான் சொல்வதை விட நீங்கள் அதை விழிகளின் வழியே அவளின் வலிகளையும், உணர்சிகளையும் உள்வாங்கி பாருங்கள், அதில் ஒரு அழுத்தம் தெரியும். ஆனால் சர்வ சாதாரணமாக மீனவ குப்பத்திலிருந்து தொடங்கும் நாகரீகமற்ற வார்த்தைகோவைகளும், காதலின் பரிமாணங்களை உணர்ந்த பின்னர் பெண்மையின் உந்துதல்களும், வலி, ரணம், ஏமாற்ற உணர்சிகளும், வீராங்கனையாக வெற்றி பெரும் போதும், அதனை கடைசியாக பயிற்சியாளரை தாவி கட்டி அனைத்துகொள்ளும் போது உங்களின் கண்களில் சிறு துளி நீராவது பூத்திருக்கும்.
இறுதி சுற்று ஒரு பெரிய சுற்று வருவதற்கு எல்லா காரணிகளும் நிரம்பியே உள்ளன. ஒரு சராசரி படத்திற்கு வெற்றி தோல்வி என்பது அதன் வருமானங்களை வைத்தே நிர்ணயிக்க படும், இந்த திரைப்படம் அதையும் தாண்டிய வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலே நீங்கள் படித்தது விமர்சனம் அல்ல, திரைப்படத்தின் தாக்கம்.

1 comment:

Kavi said...

அற்புதமான கருத்துக்கள்